மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும்.
‘ஸூஃபிக் கவிதை உலகின் சிகரம்’ என்று உலகம் போற்றும் அந்த ரூமியின் ‘ருபாயியாத்’ என்னும் நான்கடிப் பாடல்களுள் 424 பாடல்களின் தமிழாக்கமே இந்நூல். ருபாயியாத் என்றாலே நமக்கு உமர் ஃகய்யாம் என்னும் பாரசீகக் கவிஞர்தான் நினைவுக்கு வருவார். அவரின் ருபாயியாத்துகள் தமிழுக்கு கொண்டுவரப்பட்ட அளவு ரூமியின் ருபாயியாத்துகள் பரவலாக வரவில்லை. பாடல்களின் ஃபார்சீ ஒலிபெயர்ப்புகளுடனும் விரிவான அடிக்குறிப்புகளுடனும் வரும் இத்தொகுப்பு அக்குறையை நிவர்த்தி செய்கிறது.
ரூமியின் பாடல்கள் இதயத்தின் பதிவுகள். எனவே பல நேரங்களில் அங்கே பகுத்தறிவின் கட்டுப்பாடு இருப்பதில்லை. இந்தக் கட்டற்ற தன்மையே ரூமியின் கவிதைகள் மீது நவீன மனம் ஈடுபாடு கொள்ளக் காரணமாகும். எனினும், ஞானி ஒருவரின் கட்டற்ற களிப்புக்கும் அஞ்ஞானியின் சேட்டைகளுக்கும் அடிப்படை வேறுபாடுகள் உண்டு. வாசகர்கள் அவற்றை கவனத்தில் கொள்வது அவசியம்.