நம் மனத்தின் மிக அந்தரங்கமான பக்கங்களைக் கலைத்துப்போட்டதுபோல் ஓர் உணர்வை இந்நாவல் ஏற்படுத்துகிறது. தற்போதைய இருத்தலிய நிலை குலைந்துபோவதுபோல் ஓர் வேகம் வாசிப்பதைவிட்டு வெளியேறும்படி நம்மை நிர்ப்பந்திக்கிறது. இந்தக் கேள்விக்கும் சூழலுக்கும் முகம் கொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்ற அச்சவுணர்வும் எழுகிறது. பிறகு, எல்லாவுயிர்களையும் நேசிக்கச் செய்யும் மீளவியலாக் கனிவுக்குள் தள்ளிவிடுகிறது.
இது பூனை வளர்ப்பவர்களுக்கு மட்டுமான கதையன்று என்பது வாசிக்கத் தொடங்கிய சில பக்கங்களிலேயே புரிந்துவிடும். நவீன வாழ்க்கை நம்மை எவ்வளவு தூரம் அந்தந்தக் கணத்திலிருந்து விலக்கி, சின்னச்சின்ன விஷயங்களின் அழகை முழுமையாய் அனுபவிக்கவிடாமல் உந்தித் தள்ளுகிறது என்பதை நேர்த்தியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவுசெய்துள்ளது இந்நாவல்.
காதலும் நேசத்தின் நினைவுகளும் மானுட அன்பின் பிரதிநிதியாய் நின்று துயருற்றவனை எப்படி இரட்சிக்கின்றன என்று நகரும் களத்தினூடே, நாமும் அனிச்சையாய் இரட்சிப்பை நோக்கி நகர்ந்துவிடுகிறோம்.