நாம் பிரமிக்கும் ஆளுமைகளை நெருங்கிப் பார்க்கும்போது சில நேரங்களில் அது நமக்கு ஏமாற்றங்களைத் தரலாம். அதுவும் எழுத்தாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் அறியப்படும் நபர்கள் விசயத்தில் இது வெகு சாதாரணமாக நிகழ்கிறது. ஏனெனில், அவர்களின் எழுத்துகளும் சிந்தனைகளும் அவர்கள் குறித்தான சில பிம்பங்களை நமக்குள் கட்டமைக்கின்றன. தம் எழுத்திற்கும் சொந்த வாழ்விற்கும் இடைவெளி இல்லாத நபர்கள் சிலரே. அச்சிலரில் ஒருவரும், கடந்த நூற்றாண்டின் மாபெரும் ஆளுமையுமான மௌலானா மௌதூதியை நெருங்கிநின்று இவ்வாக்கம் பதிவு செய்கிறது.
இந்நூலின் ஆசிரியரும் ஓர் தலைசிறந்த ஆளுமைதான். சூடானைச் சேர்ந்தவரும், ‘நவீன இஸ்லாமிய உளவியலின் தந்தை’ என்று அறியப்படுபவருமான டாக்டர் மாலிக் பத்ரீ, மௌதூதியுடனான தனது சொந்த அனுபவத்திலிருந்து உருவாக்கிக்கொண்ட சுவாரஸ்யமான சித்திரத்தை இதில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இருபதாம் நுற்றாண்டின் ஆரம்பப் பகுதி பல இஸ்லாமிய எழுச்சி நாயகர்களைக் கண்டுள்ளது. அவர்கள் அநேகருடன் நேரடித் தொடர்பில் இருந்த ஆசிரியர், மௌதூதியின் ஆளுமையை அவர்களுடன் ஒப்பிட்டுத் தன் விமர்சனப் பார்வையை முன்வைக்கிறார். இந்தப் பார்வைதான் இறுதியானது என்று கூறமுடியாதெனினும் இதன் கனத்தை எவராலும் மறுக்க முடியாது.