கருப்பொருள் அடிப்படையிலான விளக்கம் என்பது அத்தியாயத்தின் மையக் கருத்தையும், அதன் வசனங்களை ஒன்றுக்கொன்று இணைக்கும் மறைவான தொடர்புகளையும், அதன் தொடக்கம் எப்படி அதன் முடிவுக்கு முன்னுரையாக அமைந்துள்ளது என்பதையும், அதன் முடிவு எப்படி அதன் தொடக்கத்தை உண்மைப்படுத்துகிறது என்பதையும் தெளிவுபடுத்துவதாகும்.
ஒரு அத்தியாயத்தில் பல்வேறு விவகாரங்கள்குறித்து பேசப்பட்டிருந்தாலும் அவை ஒரு தலைப்பில் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை அறிய மிகுந்த கவனம் செலுத்தினேன். முஸ்லிம்களுக்கு இந்த வடிவிலான விளக்கவுரை மிகவும் அவசியம் என்பதை நான் உணர்ந்தேன். சிறு வயதிலிருந்தே நான் குர்ஆனோடு தொடர்பில் இருக்கிறேன். என்னுடைய பத்து வயதில் நான் குர்ஆனை மனனம்செய்துவிட்டேன். இப்போது எண்பது வயதை அடைந்தபின்பும் நான் அதைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும், நான் அதிலிருந்து வெளிப்படுத்திய பொருள்கள் மிகக் குறைவானவை என்றும், எனது அறிவு இலகுவான பொருள்களையும் மீண்டும்மீண்டும் வரக்கூடிய வாசகங்களையும் தாண்டிச்செல்லவில்லை என்றும் எனக்குத் தோன்றியது.
ஆகவே, வசனத்தில் மூழ்கி, அதற்கு முன்னால் வந்துள்ள வசனத்துடனும் பின்னால் வந்துள்ள வசனத்துடனும் அது எந்த வகையில் இணைகிறது என்பதையும் அத்தியாயம் முழுமையையும் இணைக்கின்ற நுண்ணிய இழைகளையும் அறிவதை நான் அவசியமெனக் கருதினேன்.
இந்த விசயத்தில் நான் ஷைஃகு முஹம்மது அப்துல்லாஹ் தர்றாஸின் வழிமுறையைப் பின்பற்றினேன். அவர் குர்ஆனின் மிக நீளமான அத்தியாயமான அல்பகறாவைக் கொண்டு இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் அந்நபவுல் அழீம் என்பதாகும். நான் அறிந்தவரையில் அதுதான் கருப்பொருள் அடிப்படையில் ஒரு அத்தியாயத்தை முழுமையாக அணுகிய முதல் விளக்கவுரை.
என்னால் இந்தப் பணியைச் செய்ய முடியுமா என்று தயங்கிநின்றேன். பின்னர், இயலாமல் நின்றுவிடுவதைவிடக் குறைந்தது இந்தப் பாதையில் ஓரிரு அடிகளாவது கடந்துவிட வேண்டும் என்று எனக்கு நானே முடிவுசெய்துகொண்டு முன்னேறினேன். அல்லாஹ் எனக்கு உதவிசெய்தான். பாதையில் இறுதியை அடையும் பெரும் நற்பேற்றினை அவன் எனக்கு வழங்கினான்.
- முஹம்மது அல்கஸ்ஸாலி