இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.
பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்தில் வைக்கிறது: பேரரசர் சுலைமானின் மோதிரம். ஆம், ஆயிரமாயிரம் மரபுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முத்திரை மோதிரம்தான். புகையற்ற நெருப்பால் படைக்கப்பட்ட பயங்கர உயிரினமான ஜின்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி புரிவதற்காக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட மோதிரம் அது.
ஆனால், தேடிச்செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அந்தப் பயணம் ஒரு வினோத பாதிப்பை ஏற்படுத்துகிறது: மாயக் காட்சிகள் அவர்களின் கனவுகளிலும் நினைவுகளிலும் ஊடுருவுகின்றன. அவர்களின் இதயங்களில் கண்ணீர் நிரம்புகிறது. மர்மங்கள் மண்டுகின்றன. பூமியைப் புரட்டுவதுபோன்ற புயல்கள்; முடியப்போவதே இல்லை என்பதுபோன்ற இரவுகள்; மண்ணுக்குள் எப்போதோ தொலைந்த தொல் நகரம்; மேலும், ஜீவ நெருப்பால் ஆன ஜின்கள்.
இறுதியில், அந்தப் பயணம் ஜின்களின் விதியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அன்பின் வழியையும் இறைவனின் அளப்பரிய கருணையையும் வெளிப்படுத்துகிறது.