தென்னிந்திய, இலங்கை முஸ்லிம்களால் தனித்துவமாக உருவாக்கப்பட்டு, பல நூற்றாண்டுகள் வளர்க்கப்பட்ட ‘அறபுத் தமிழ்’ அல்லது அர்வி மொழியின் தோற்றம், வளர்ச்சி, வரலாற்றுப் பங்களிப்பு, அதன் கலாச்சார-பண்பாட்டுப் பாரம்பரியம் ஆகியவை குறித்து வெளிவரும் முதலாவது விரிவான ஆய்வு நூல் இது. அறபுத் தமிழ் மொழி இன்று பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. அதனை வாசித்தறியக்கூடியவர்களும் அரிதாகவே இன்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மரணித்த மொழியின் நிலைமைதான். அதனை உயிர்ப்பிக்க அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. ஆயினும், அறபுத் தமிழின் தொன்மையும், சிறப்பும் குறைத்து மதிப்பிட முடியாதவை. அம்மொழிபற்றிய ஆய்வுகளும், அம்மொழியில் வெளிவந்த ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுகளும் மிக அதிகமாகச் செய்யப்பட வேண்டியுள்ளதொரு சூழலில் இந்நூல் வெளிவருவது முக்கியமானது. இதுபற்றி இனி செய்யப்படும் ஆய்வுகள் அனைத்திற்கும் இது நல்லதொரு முன்னோடியாக அமையும் என்பதில் ஐயமில்லை.